ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கிராம நிர்வாக அதிகாரியிடம் மனு அளித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் அதிகமாக காணப்படுகின்றன. இந்நிலையில் இந்த குளம் ஏரிகள் உள்ளிட்டவை ஆக்கிரமிப்புகளால் சுருங்கிய நிலையில் இருக்கின்றது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகளின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் ஆக்கிரமிப்புகளால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் தங்களது சொந்த செலவில் நீர்நிலைகளை சீரமைத்துள்ளனர். இந்நிலையில் கீரமங்கலம் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கிராம நிர்வாக அலுவலரான அருள் வேந்தன் என்பவரிடம் மனு அளித்துள்ளனர். மேலும் அந்த மனுவில் நிலங்களின் வகை, சர்வே எண், ஆக்கிரமிப்பாளர்களின் பெயர்கள் உள்ளிட்டவை தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.