தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தியது தொடர்பாக முன்னாள் காவல்துறை அதிகாரி உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் அரண்மனை புதூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்ததில் அவரிடம் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கண்ணனை கைது செய்து அவரது வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியதில் அங்கு 6 மூட்டைகளில் புகையிலைப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
இவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் கண்ணனை பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் தேனியை சேர்ந்த ரத்தினவேல், பிரசன்னா ஆகியோரிடமிருந்து புகையிலை பொருட்களை வாங்கியதாகவும், அவர்கள் ஆண்டிபட்டியில் உள்ள ஒக்கரைப்பட்டியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் காவல்துறையினர் அந்த கோழிப்பண்ணைக்கு கண்ணனையும் அழைத்து சென்ற தனிப்படையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அங்கு 44 மூட்டைகளில் சுமார் 10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் இது தொடர்பாக கண்ணன், ரத்தினவேல், பிரசன்னா, சீனிவாசன் ஆகிய 4 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் பெங்களூரில் இருந்து புகையிலைப் பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்வது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளனர். இதில் பிரசன்னா என்பவர் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில் கடந்த ஆண்டு இதுபோல் புகையிலை பொருட்களை கடத்தியதாக அவரை பணியிலிருந்து கட்டாய ஓய்வு அளித்தது குறிப்பிடத்தக்கது.