5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 இறுதிப் போட்டியில் திருச்சி வாரியர்ஸ்-க்கு எதிரான ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சேப்பாக் அணி கோப்பையை தட்டி சென்றது .
5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் பேட் செய்த சேப்பாக் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை குவித்தது. இதில் அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் ஜெகதீசன் 58 பந்துகளில் 7 பவுண்டரி , 2 சிக்சர்கள் அடித்து விளாசி 90 ரன்கள் குவித்தார். திருச்சி அணி தரப்பில் ராஹில் மற்றும் பொய்யாமொழி தலா 2 விக்கெட்டும் , அந்தோனி தாஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதன் பிறகு களமிறங்கிய திருச்சி அணி 184 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது.
இதில் அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் அமித் சாத்விக் 16 பந்துகளில் 36 ரன்கள் குவித்தார். இதையடுத்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதன் பிறகு களமிறங்கிய சரவணகுமார் பொறுப்புடன் விளையாடினார். இவருக்கு மதிவாணன் ஒத்துழைப்பு கொடுக்க இந்த ஜோடி 50 ரன்கள் எடுத்தது. இதில் சரவணக்குமார் 45 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பரபரப்பான ஆட்டத்தில் இறுதி வரை போராடியும் திருச்சி அணி 175 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சேப்பாக் அணி 3-வது முறையாக கோப்பையை தட்டிச் சென்றது. சேப்பாக்கம் தரப்பில் சோனு யாதவ் 2 விக்கெட்டும் , ராஜகோபால் சதீஷ் , சாய் கிஷோர் ,அலெக்சாண்டர் மற்றும் அருண், ஹரிஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்தும் கைப்பற்றினர்.