ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், தலிபான்கள் வசம் வந்துள்ள நிலையில் அங்குள்ள மக்கள் பதற்மாக விமான நிலையம் நோக்கி ஓடும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. மிகக் குறுகிய காலத்தில் ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தலிபான்கள், தலைநகர் காபூலையும் நேற்று அதிரடியாக கைப்பற்றினர்.
அதிபர் மாளிகையும் தலிபான்கள் வசம் வந்தததைத் தொடர்ந்து, தலைநகரில் உள்ள அரசு அலுவலகங்களின் முக்கிய ஆவணங்களை அரசு பணியாளர்கள் தீயிட்டு எரித்து விட்டு அங்கிருந்து தப்பினர். இதற்கிடையில் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி, காபூலில் இருந்து வெளியேறி விட்டதகாவும், தலிபான்கள் தரப்பில் இடைக்கால அதிபராக அலி அகமது ஜலாலி நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ள சூழலில் நாட்டில் மீண்டும் பழமைவாதம் தலைதூக்கும் என அஞ்சும் மக்கள், வெளிநாடுகளில் தஞ்சமடைய துவங்கியுள்ளனர். வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஆப்கனை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறத் துவங்கியுள்ளனர். ‘ஆட்சி மாற்றத்தினால் பொது மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படாது. தங்களுடைய போராளிகளைக் கண்டு மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்’ என்று தலிபன்கள் அறிக்கை வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளனர்.