Categories
உலக செய்திகள்

மலேசிய அரசியலில் ஏற்பட்ட குழப்பம்.. பதவியை ராஜினாமா செய்த முகைதின் யாசின்.. புதிய பிரதமர் யார்..?

மலேசிய பிரதமர், முகைதின் யாசின் இன்று பிரதமர் பதவியை ராஜினாமா  செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் கூட்டணி அரசில் குழப்பம் உண்டானது. எனவே, பிரதமர் மகாதீர் கடந்த வருடம் ராஜினாமா செய்தார். அதன் பின்பு, முகைதின் யாசின் பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில், கொரோனாவால், கடந்த ஜனவரி மாதத்தில் அவரசநிலை அறிவிக்கப்பட்டது. அந்த உத்தரவை, மன்னரின் அனுமதியின்றி, பிரதமர் முகைதின் யாசின் திரும்பப்பெற்றார். இது தான் தற்போது பெரும் பிரச்சனையாக மாறியிருக்கிறது.
அதன் பின்பு, பிரதமர் தலைமையிலான கூட்டணி அரசில் ஒன்றாக இருந்த ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு, கூட்டணியை விட்டு விலகிக்கொண்டது. இதனால் பிரதமர் முகைதின் யாசின் அரசின் முக்கிய பலம் பறிபோனது. மலேசியாவின் அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஆளும் அரசாங்கம்  பெரும்பான்மையை இழக்கும் பட்சத்தில் பிரதமர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்.
எனினும், பிரதமர் முகைதின் யாசின், தன் அரசு பெரும்பான்மையுடன் இருக்கிறது என்றும், வரும் செப்டம்பர் மாதத்தில், நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கபோவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திடீரென்று, முகைதின் யாசின் பதவி விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, பிரதமர் இன்று மன்னரை நேரடியாக சந்தித்து தன்  ராஜினாமா கடிதத்தை அளிப்பார் என்று பிரதமர் விவகாரத்துறை மந்திரி முஹம்மத் ரிச்சுவான் முஹம்மத் யூசுப் கூறியிருக்கிறார்.
இதனால், மலேசியாவின் அரசியல் பரபரப்பாக உள்ளது. இதற்கிடையில் எதிர்க்கட்சியின்  தலைவர் அன்வர் இப்ராஹிம் பிரதமராக பொறுப்பேற்க வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

Categories

Tech |