முகநூல் நண்பரை பார்க்க சென்ற இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் எரிந்த நிலையில் இளம் பெண்ணின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இளம் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக எரிந்த நிலையில் கிடந்த பெண் கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் வசித்த ரஞ்சினி என்பது தெரியவந்துள்ளது.
இந்த இளம்பெண் முகநூலில் கார் டிரைவரான சூர்யா என்ற வாலிபருடன் கடந்த சில ஆண்டுகளாக பேசி வந்துள்ளார். இந்நிலையில் முகநூல் நண்பரான சூர்யாவை பார்ப்பதற்காக ரஞ்சனி கிருஷ்ணகிரிக்கு சென்றுள்ளார். அப்போது தான் சூர்யாவுக்கு ஏற்கனவே திருமணமானது ரஞ்சனிக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சொந்த ஊருக்குச் செல்லாமல் அப்பகுதியில் இருக்கும் சூப்பர் மார்கெட்டில் வேலை செய்து கொண்டிருந்த ரஞ்சினி திடீரென எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதன் பின் முகநூல் நண்பரான சூர்யாவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.