3 நிமிடத்தில் 300 திருக்குறளை ஒப்புவித்து ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி உலக சாதனை படைத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த தினக்கூலி வேலை பார்க்கும் ஜான் அருண்குமார் மற்றும் கலையரசி ஆகிய தம்பதிகளின் மகள் கனிஷ்கா. இவர் நாகர்கோவில் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். சிறிய வயது முதலே வேகமாக பேசும் பழக்கம் கொண்ட இவர் பள்ளி பாடங்களை வேகமாக படித்துள்ளார். இதனால் இவரது திறமையை ஊக்குவிக்கும் வகையில் அவரது பள்ளி ஆசிரியர்கள் இவருக்கு திருக்குறளைப் பிழை மாறாமல் படிக்கும் செயல் திறனை கற்றுக் கொடுத்தனர்.
அதன்பிறகு நாகர்கோவில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிரம்ப் உலக சாதனை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் முன்னிலையில் மூன்று நிமிடத்தில் 300 திருக்குறளை ஒப்புவித்து சாதனை புரிந்துள்ளார். படத்தை 2019ஆம் ஆண்டு தென்காசி பகுதியை சேர்ந்த மாணவி 200 திருக்குறளை 5 நிமிடங்களில் ஒப்புவித்தார். அந்த சாதனையை முறியடித்து நாகர்கோவிலில் உள்ள அரசு பள்ளி மாணவி 230 திருக்குறளை மூன்று நிமிடங்கள் 27 நொடிகளில் ஒப்புவித்து உலக சாதனை படைத்தார். இந்த சாதனையை தற்போது நாகர்கோவிலை சேர்ந்த மாணவி கனிஷ்கா முறியடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த மாணவிக்கு டிரம்ப் உலக சாதனை அமைப்பு கேடயமும், சான்றிதழும் வழங்கி கௌரவப்படுத்தியது.