மதுரையில் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் 40 மாணவர்கள் விபத்துக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள வடசேரி சாத்தியார் கிராம ஓடையில் பாலம் ஒன்று 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு போக்குவரத்து வசதிக்காக திறந்துவிடப்பட்டது. தற்பொழுது அந்த பாலம் சேதம் அடைந்து இடியும் நிலையில் காணப்படுவதால் அந்த வழியாக ஊருக்குள் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளன. இதன் காரணமாக பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த ஒரே ஒரு அரசு பேருந்தும் ஊருக்குள் வருவது இல்லை என்றும், பேருந்துக்காக பல கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் பரிதாப நிலை இருப்பதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்தப் பாலத்தை இடித்து விட்டு புதிய பாலத்தை கட்டி தர வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இதுவரை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் பள்ளி வேண் ஒன்று அந்த பாலத்தை கடந்து செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக பாலத்தின் ஒரு பகுதியில் சாலை சரிந்ததால் அந்தரத்தில் வேனின் யமுனை பக்க டயர் தொங்கியது. இதையடுத்து வேனில் பயணம் செய்த குழந்தைகளை கிராம மக்கள் ஓடி வந்து பின்பக்க அவசர வழிக் கதவைத் திறந்து பத்திரமாக மீட்டனர். பெரும் விபத்து ஏற்பட்டு உயிர் வலி ஏற்படுவதற்கு முன்பு பாலத்தை இடித்து அப்புறப்படுத்தி புதிய பாலத்தை கட்டி தர அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.