அதிபர் நாட்டைவிட்டு வெளியேறும் போது பணத்துடன் சென்றதாக ரஷ்யா தூதரக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியதை அடுத்து அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி பதவி விலகியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் தலீபான்களின் கையில் சிக்காமல் இருப்பதற்காக காபூலில் இருந்து வெளியேறி தஜகிஸ்தானுக்கு ராணுவ விமானம் மூலம் தப்பிச் சென்றுள்ளார். இவர் சென்ற விமானமானது தஜகிஸ்தானில் உள்ள Dushanbe விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது. தற்பொழுது அஷ்ரப் கனி ஓமனில் இருக்கிறார். அவருடன் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஹம்துல்லா மொஹிப் உள்ளார்.
மேலும் அவர் ஓமனிலிருந்துஅமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி விமானத்தில் புறப்படும் பொழுது நான்கு கார்கள் , ஒரு ஹெலிகாப்டர் போன்றவற்றில் பணத்தை நிரப்பி கொண்டு சென்றுள்ளார் என்று ரஷ்ய தூதரக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரஷ்ய தூதரக செய்தி தொடர்பாளர் நிகிடா இஷென்கோ கூறியதில் “அவர் தப்பிச் சென்ற போது நான்கு கார்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரில் பணத்தை நிரப்பிக் கொண்டிருந்தனர்.
ஆனால் எல்லா பணத்தையும் அதில் நிரப்ப முடியவில்லை. இதனால் விமான ஓடுபாதையில் சிறிதளவு பணம் சிதறப்பட்டது” என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக அஷ்ரப் கனி சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில் “மக்கள் துன்புறுவதை தவிர்க்கவே ஆப்கானை விட்டு வெளியேறுவதாகவும் இனிமேல் நாட்டின் மரியாதைக்கும் பாதுகாப்புக்கும் தலீபான்களே பொறுப்பு” என்று கூறியுள்ளார். அதிலும் அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வெளியேறியதால் போரானது முடிவுக்கு வந்துள்ளதாகவும் பொதுமக்கள் இனி பயப்பட வேண்டாம் என்றும் தலீபான்கள் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.