ஒரு பல் செட்டுகாக 6 வயது குழந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் கோர்டி காவல் நிலையத்தில் கடந்த 12ஆம் தேதி கணவன் மனைவி இருவரும் தனது 6 வயது மகளை காணவில்லை என்று புகார் அளித்தனர். புகாரின் பெயரில் மாயமான அந்த சிறுமியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி ஒரு பள்ளத்தில் சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமியின் கை கால்களை கட்டி, அவளது உடலை சாக்கு பையில் வைத்து மர்ம நபர்கள் வீசிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று நிலையில் சிறுமியின் பெற்றோர்கள் அதே பகுதியில் வசிக்கும் சங்கனகவுடா என்ற குடும்பத்தினருக்கும், இவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறினர்.
மேலும் சிறுமி கொலையான பின்னர் சங்கனகவுடா தலைமறைவாகி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த கொலை சம்பந்தமாக அவரிடம் விசாரணை செய்தபோது தனது தாயின் பல் செட்டை சிறுமி உடைத்ததாகவும், அதற்கு பழிவாங்குவதற்காக சிறுமியை கொலை செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதைக்கேட்டு போலீசார் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.