கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தாய் தனது குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தம்மம்பதி பகுதியில் கூலி தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டன் சரோஜினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு நிவன்யா ஸ்ரீ என்ற 3 வயது பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் சரோஜினி தனது குழந்தை திடீரென மயக்கம் போட்டு விழுந்ததாக அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியோடு சரோஜினி தனது குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தையின் இறப்பில் சந்தேகமடைந்த மருத்துவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் குழந்தையின் தாயான சரோஜினியிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சரோஜினியின் செல்போனை காவல்துறையினர் வாங்கி பார்த்தபோது சின்ன பொம்மன் என்பவரிடம் சரோஜினி அடிக்கடி பேசியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தை கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சரோஜினிக்கும், சின்ன பொம்மன் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
எனவே சரோஜினி கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து விட்டனர்.