ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களின் நிலைமை குறித்து அங்குள்ள பெண் மேயர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்த நிலையில் அவர்கள் காபூலை கைப்பற்றினர். இதனால் அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கையில் சிக்கியுள்ளது. இதனையடுத்து பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இதனை தொடர்ந்து தலைநகர் காபூலை கைப்பற்றிய தலீபான்கள் ஜனாதிபதி மாளிகை, நாடாளுமன்றம் போன்றவற்றையும் தங்களின் கட்டுப்பாட்டில் கீழ் கொண்டு வந்துள்ளனர். மேலும் ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறி உள்ளார். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் முதல் பெண் மேயரான Zarifa Ghafari தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது “தலீபான்கள் எங்களை தேடி எந்த நேரத்திலும் வருவார்கள். மேலும் அவர்கள் எங்களை கொன்றுவிடுவார்கள். தற்பொழுது இருக்கும் நிலையில் எண்ணையோ அல்லது எனது குடும்பத்தையோ யாராலும் காப்பாற்ற முடியாது. மேலும் எனது குடும்பம், வீடு ஆகியவற்றை விட்டு என்னால் வெளியேற முடியாது. அப்படியே வெளியேறினாலும் என்னால் எங்கு செல்ல முடியும்” என்று கூறியுள்ளார். இவர் ஆப்கானிஸ்தானில் உள்ள Wardak நகரத்தின் முதல் பெண் மேயராக கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருகிறார். இவருக்கு 27 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் கருத்துக்கள் ஆப்கானில் உள்ள பெண்களின் குரலாகவே அனைவரிடத்திலும் ஒலிக்கிறது.
அங்குள்ள பெண்கள் கல்வியறிவு பெற்ற போதிலும் தலீபான்களின் துப்பாக்கி முனைக்கு பயந்து தங்களின் பட்டபடிப்பு சான்றிதழ்களை மறைத்து வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. எந்த பயமும் இன்றி சுதந்திரமாக வேலைக்கு செல்லும் பெண்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இது மட்டுமின்றி Zarifa Ghafari கூறியதில் “கடந்த 20 ஆண்டுகளில் இளம் சமூகத்தினர் மிகவும் தெளிவடைந்துள்ளனர். அவர்கள் உலகின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அறிந்து கொள்கின்றனர். மேலும் இனி அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காகவும் பெண்களின் உரிமைகளுக்காகவும் போராடுவார்கள்” என்று கூறியுள்ளார்.