Categories
தேசிய செய்திகள்

புதுவையில் 62 வயதில் பாலிடெக்னிக்… முன்னாள் ராணுவ வீரரின் கல்வி தாகம்…!!!

கல்வி கற்க வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார் புதுவையை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் பரமசிவம். தனது 62 வயதில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து கல்வி பயில உள்ள பரமசிவத்தின் கல்வி மீதுள்ள காதல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

எந்த சாதனைக்கும் வயது ஒரு பொருட்டே அல்ல. வயதும் முதுமையும் உடலுக்குத் தானே தவிர, அறிவுக்கும் உழைப்புக்கும் இல்லை என்பதை இன்று பல முதியவர்கள் நிரூபித்து வருகிறார்கள். அந்த வரிசையில் புதுச்சேரியை சேர்ந்த 62 வயது முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கல்வி கற்க வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்.

புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் 62 வயதான பரமசிவம். அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரை படித்த பரமசிவம், மேற்கொண்டு படிப்பதற்கு ஆசை இருந்தும், தனது குடும்ப சூழ்நிலை காரணமாக, 1978 ஆம் ஆண்டு, தனது 19 வயதிலேயே இந்திய இராணுவத்தில் பணிக்கு சேர்ந்தார்.

ஜம்மு காஷ்மீர், சிக்கிம் என பல்வேறு இடங்களில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இந்திய நாட்டிற்காக சேவை செய்த பரமசிவம், கடந்த 2008 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் புதுச்சேரி அரசின் ஏஎப்டி மில்லில் பாதுகாவலராக பணியில் சேர்ந்த பரமசிவத்திற்கு, குடும்ப சூழ்நிலை காரணமாக தன்னால் 10 ஆம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் போனதை எண்ணி அவ்வப்போது வருத்தப்பட்டு வந்தார்.

எனினும் இந்த வயதிலும் துவண்டு விடாத பரமசிவம், எப்படியாவது மேற்கொண்டு படிக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு, கடந்து இரண்டு ஆண்டுகளாக புதுச்சேரி அரசின் மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தாண்டும் விடா முயற்சியாக கல்லூரியில் சேருவதற்காக ஆன்லைனில், விண்ணப்பித்துள்ளார் பரமசிவம்.

இந்நிலையில் இவரது விண்ணப்பம் சற்று வித்தியாசமாக இருக்கவே இவரை நேரில் அழைத்து, நேர்காணல் செய்துள்ளார் மோதிலாள் நேரு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் பசுபதி. அப்போது பரமசிவத்திற்கு கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான அனைத்து தகுதிகளும், போதிய மதிப்பெண்களும் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு டிப்ளமோவில், மூன்று ஆண்டு இஇஇ பாடப்பிரிவை கல்லூரி முதல்வர் ஒதுக்கி தந்துள்ளார். வரும் 19 ஆம் தேதி பரமசிவத்திற்கு இதற்கான ஆணை வழங்கப்பட உள்ளது.

மேலும் கல்லூரியில் சேர்ந்து சக மாணவர்களிடம் பல்வேறு விஷயங்களை கற்றுக்கொள்ள உள்ளதாகவும், அவர்களுடன் தன்னுடைய அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ள உள்ளதாகவும் பரமசிவம் மகிழ்ச்சிபட தெரிவித்துள்ளார். கல்வி கற்க வயது ஒரு தடையில்லை இல்லை என்பதை, தன்னுடைய லட்சியத்தில் சிறிதளவும் பின்வாங்காமல் நிருபித்து காட்டியிருக்கிறார் பரமசிவம்.

Categories

Tech |