திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வழிப்பறி செய்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ள 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக கடந்த மாதம் ஆரணி அருகே வந்த போது அவரை வழிமறித்த கும்பல் ஒன்று அவரை தாக்கி அவர் வைத்திருந்த பணம் நகை உள்ளிட்டவற்றை பறித்துச் சென்று தப்பி ஓடியது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை செய்த காவல்துறையினர் பாளையத்தைச் சேர்ந்த மண்டை என்கின்ற மணிகண்டன்.
மணி என்கின்ற மணிகண்டன் ஆகியோரை கைது செய்து 15 நாள் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தியின் பரிந்துரையின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.