மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாவடி பகுதியிலுள்ள பாலச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராபின்சன் என்ற மகன் உள்ளார். இவரும் மாவடி போஸ்ட் ஆபீஸ் தெருவில் வசிக்கும் தொழிலாளியான முகுந்தன் என்பவரும் மோட்டார் சைக்கிளில் திருக்குறுங்குடியில் உள்ள வங்கிக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து மலையடிபுதூர் பாலம் அருகில் வந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி அப்பகுதியில் உள்ள இசக்கியம்மன் கோவில் முன்பு உள்ள திண்டில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த முகுந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து ராபின்சன் படுகாயமடைந்தார். இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் இதுகுறித்து திருக்குறுங்குடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராபின்சனை உடனடியாக மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து முகுந்தனின் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.