ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அஞ்சுவீடு, பாரதி அண்ணா நகர், கணேஷபுரம் போன்ற கிராம பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை அட்டகாசம் செய்து வருகின்றது. இந்நிலையில் பேத்துப்பாறை கிராமத்திற்குள் மாலை நேரத்தில் புகுந்த அந்த ஒற்றை காட்டு யானை வீடுகளை முற்றுகையிட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானையை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. எனவே இரவு நேரத்தில் ஊருக்குள் நுழையும் அந்த ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.