ஆப்கானிஸ்தானில் உள்ள அதிபர் மாளிகையில் தலீபான்கள் முதல் செய்தி மாநாட்டை நடத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் தலீபான்களால் கைப்பற்றப்பட்டு பின்னர் நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கையில் சிக்கியுள்ளது. இதனை அடுத்து ராணுவம் முதல் அனைத்து துறைகளும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. மேலும் தலீபான்களின் கையில் நாடு சிக்கியுள்ளதால் அதனை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைந்து அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் அனைத்தும் பறி போகுமோ என்ற பய உணர்வு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆட்சியை கைப்பற்றிய தலீபான்கள் முதல் செய்தி மாநாடு ஒன்றை ஜனாதிபதி மாளிகையில் நடத்தியுள்ளனர்.
அதில் தலீபான்களின் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறியதில் “ஆப்கானிஸ்தானை பழிவாங்க நாங்கள் விரும்பவில்லை. அனைத்து மக்களுக்கும் நாங்கள் பொதுமன்னிப்பு வழங்குகிறோம். தற்பொழுது தலைநகர் காபூலில் சட்டம் மற்றும் ஒழுங்கை உருவாக்குவதே எங்களின் முக்கிய முன்னுரிமை. குறிப்பாக நகர மக்கள் அனைவரும் அமைதியாக வாழ வழிவகை செய்யப்படும். அதிலும் பெண்களின் உரிமைகள் இஸ்லாமிய சட்ட விதிகளுக்கு உட்பட்டு அங்கீகரிக்கப்படும். அவர்கள் வேலைக்கு செல்லவோ, பள்ளிக்கு போகவோ, மருத்துவமனைகளில் பணிபுரியவோ அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். மேலும் பெண்கள் அரசாங்கத்தில் இணைய வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளோம்.
நாங்கள் ஆப்கானிஸ்தானில் சண்டையிட விரும்பவில்லை. இதனை அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளுக்கும் உறுதி அளிக்கிறோம். மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள தலீபான்கள் வேறு எந்த நாட்டிற்கும் எதிராக செயல்பட மாட்டார்கள். நாங்கள் ஆப்கானிஸ்தானில் பொருளாதாரத்தை மேம்படுத்துவோம். எங்களை உலகம் நம்ப வேண்டும். அப்பொழுது தான் மக்களின் முன்னேற்றத்திற்காக நாங்கள் உழைக்க முடியும். குறிப்பாக எந்த உள்நாட்டு அல்லது வெளிப்புற எதிரிகளையும் நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் வெற்றிகரமான மற்றும் அமைதியான ஆப்கானிஸ்தானை உருவாக்க உலகத்துடன் இணைந்து செயல்படுவோம்” என்று தெரிவித்துள்ளார்.