தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றியதால் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் கால்பந்து அணியின் உறுப்பினர்கள் கண்ணீர் விட்டு கதறி வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் கால்பந்து அணியை உருவாக்கியவரும், தலிபான்களின் மோசமான நடவடிக்கைகள் குறித்து ஊடகங்கள் வாயிலாக விமர்சித்தவருமான Khalida Popal கடந்த 2011-ஆம் ஆண்டு விளையாடுவதை நிறுத்திவிட்டார். மேலும் தலிபான்களின் கொலை மிரட்டல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி கடந்த 2016-ஆம் ஆண்டு டென்மார்க்கில் அடைக்கலம் புகுந்தார். இருப்பினும் தன்னுடைய சக வீராங்கனைகளுக்கு நம்பிக்கை ஊட்டியதோடு, பெண்களுக்கு எதிரான தலிபான்களின் மோசமான நடவடிக்கைகளை சமூக ஊடகங்கள் வாயிலாக வெளிபடுத்தும்படி உற்சாகப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளதால் பெண்கள் கால்பந்து அணியின் வீராங்கனைகள் நிலை தற்போது மோசமாக உள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பெண்கள் கால்பந்து அணியின் வீராங்கனைகள் Khalida-வை தொடர்புகொண்டு கண்ணீர் விட்டு கதறியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் Khalida பெண்கள் கால்பந்து அணியின் வீராங்கனைகளுக்கு “நீங்கள் இருக்கும் வீட்டை விட்டு வெளியேறி விடுங்கள். உங்களது புகைப்படங்கள் மற்றும் அனைத்து வரலாற்றையும் சமூக ஊடகங்களில் இருந்து அழித்துவிட்டு எப்படியாவது ஒளிந்து கொள்ளுங்கள்” என்று கூறியதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெண்கள் கால்பந்து அணியின் வீராங்கனைகளின் உயிர் ஆபத்தில் இருப்பதாகவும் Khalida தெரிவித்துள்ளார்.