நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் பேரவையில் தொடங்குவதாக சபாநாயகர் அறிவித்த உடனேயே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ச்சியாக பேச முற்பட்டு கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக கொடநாடு விவகாரம் தொடர்பாக பேச முற்பட்டு பல்வேறு விதமான தகவல்களையும் அவர் தெரிவித்தார். ஆனால் சபாநாயகர் உரிய அனுமதி பெறாமல் பேச முடியாது என்று தொடர்ச்சியாக அவர் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அதிமுகவினர் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியவாறும், பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் தங்களுடைய கருத்துக்களை முன்வைக்க முயற்சியை மேற்கொண்டார்கள்.
ஆனால் அனுமதி இல்லாமல் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாது என சபாநாயகர் தொடர்ந்த பின்பும் தொடர்ந்து கடும் அமளி ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இது தொடர்பான விளக்கத்தை கொடுப்பதற்காக எழுந்து அதற்கான பதிலை கொடுக்க முற்படும் போது கூட அதிமுகவினர் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியவாறு இருந்ததால் சபாநாயகர் தொடர்ந்து கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில்தான் முதலமைச்சர் மு க ஸ்டாலின் எழுந்து இந்த விவகாரம் தொடர்பாக உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் தலையீடு ஏதுமில்லை. சட்டத்தின் ஆட்சி கண்டிப்பாக நடக்க கூடிய நிலையில் யாரும் அச்சப்பட வேண்டாம் என்ற பதிலைத் தெரிவித்தார்.மேலும் அவையில் இருந்த அதிமுகவினர் திட்டமிட்டு உரிய அனுமதி பெறாமல் பதாகைகளை கொண்டு வந்து அவையில் கூச்சல் குழப்பம் ஏற்படுத்திக் கொண்டிருந்த நிலையில் அவர்கள் வெளிநடப்பு செய்து இருக்கிறார்கள்.
பேரவையில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் உடனடியாக அதிகாரிகள் அவர்களை அப்புறப்படுத்த வேண்டும். இது ஒரு தவறான ஒரு முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்ற ஒரு எச்சரிக்கையும், கண்டனத்தையும் கூட சபாநாயகர் பேரவையில் பதிவு செய்தார்.காவல்துறையை கையில் வைத்திருக்க கூடிய முதலமைச்சர் இந்த விவகாரம் தொடர்பாக பேசியதில்,
நான் தொடக்கத்திலேயே சொன்னேன் அரசியல் நோக்கத்தோடு பழிவாங்கும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லை. நீங்களே சொல்லி இருக்கீங்க தேர்தல் நேரத்தில் சொன்ன உறுதிமொழி எல்லாம் என்னாச்சு, எதையும் நிறைவேற்றவில்லை நிறைவேற்றவில்லை என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதில் ஒன்றுதான் இது. இன்னும் பல இருக்கு. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தான்… நீதிமன்றத்தின் உத்தரவின்படி தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுமே தவிர தனிப்பட்ட ஒரு அரசியல் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லை என ஸ்டாலின் தெரிவித்தார்.