மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள காரப்பாக்கம் கிராமத்தில் எலக்ட்ரீசியனான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக கீழப்பழுவூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து அங்கிருக்கும் கல்லூரி அருகில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது.
இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மணிகண்டனின் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரியை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.