ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள முருகம்பாளையம் பாறக்காடு பகுதியில் கடந்த மாதம் 22 – ஆம் தேதி குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் இணைந்து ஒரு வீட்டில் சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வீட்டில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அங்கிருந்த மொத்தம் 12 ஆயிரத்து 700 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தேனி மாவட்டத்திலுள்ள கூடலூர் பகுதியில் வசிக்கும் சூர்யா மற்றும் ஆண்டிபட்டி பகுதியில் வசிக்கும் கருப்புசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து சூர்யா முருகம்பாளையத்திலும் கருப்புசாமி இடுவம்பாளையத்திலும் தங்கியிருந்து ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் சூர்யா மற்றும் கருப்புசாமி ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்துள்ளனர். அந்த பரிந்துரையை ஏற்ற போலீஸ் கமிஷனர் வனிதா 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கோவை மத்திய சிறையில் உள்ள சூர்யா மற்றும் கருப்புசாமி ஆகிய 2 பேரிடமும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான அறிக்கையை வழங்கியுள்ளனர்.