மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ஆம் வருடம் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அனைவரும் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். எனவே கொடநாடு எஸ்டேட்டில் என்ன நடந்தது? என்பது இன்னும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. இதற்கிடையில் இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயனிடம் காவல்துறையினர் நேற்று விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்து அதிமுகவினர் இன்று வெளிநடப்பு செய்தனர். மேலும் கொடநாடு வழக்கில் தன்னுடைய பெயரை சேர்க்க சதி நடப்பதாகவும் எடப்பாடி குற்றம்சாட்டினார். இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த சபாநாயகர் அப்பாவு, அதிமுக உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற நான் உத்தரவிடவில்லை. அதிமுக உறுப்பினர்கள் நேற்று தாமதமாகவே வெளியேறினார்கள். மக்கள் பிரச்சினைகளை பேசும் அவையில் தனிப்பட்ட பிரச்சினைகளை எழுப்ப கூடாது என்று கூறியுள்ளார்.