காதலர்கள் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் கிணற்றுக்குள் பாய்ந்ததால் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் 23 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் காஞ்சிபுரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இந்த இளம்பெண்ணும், மோகன்ராஜ் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதுச்சாவடி பகுதியில் இருக்கும் தைல மர காட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இவர்களின் மோட்டார் சைக்கிள் கிணற்றுக்குள் பாய்ந்து விட்டது.
இது குறித்து பொதுமக்கள் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மோகன்ராஜை சடலமாக மீட்டனர். அதன் பிறகு அந்த இளம்பெண்ணை உயிருடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.