நாட்டை விட்டு வெளியேறிய அதிபர் அஷ்ரப் கனி ஓமனில் அடைக்கலம் புகுந்ததை அடுத்து காணொளி ஒன்றை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை தலீபான்கள் கடந்த ஞாயிறுகிழமை அன்று கைப்பற்றியதால் அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது. இதனால் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து அவர் ஓமனில் அடைக்கலம் புகுந்துள்ளார் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் அதிபர் அஷ்ரப் கனி சமூக ஊடகத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது “நான் எனது காலணிகளை கழற்றி விட்டு பூட்ஸ் கூட அணிய முடியாத நிலையில் வெளியேறினேன்.
அங்குள்ள உள்ளூர் மொழி பேசத் தெரியாதவர்கள் என்னை அதிபர் மாளிகைக்குள் தேடி வந்தனர். நான் அங்கிருந்த அவசர அவசரமாக வெளியேறினேன். இந்த நிகழ்வுகள் அனைத்தும் மிக வேகமாக நடைபெற்றன. நான் மட்டும் ஒருவேளை அங்கிருந்தால் ஆப்கானிஸ்தானில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை அங்குள்ள மக்களின் கண் முன்பாகவே மீண்டும் தூக்கிலிட செய்திருப்பார்கள். மேலும் தலீபான்களை உள்ளடக்கிய அரசாங்கத்தை செயல்படுத்துவது தொடர்பாக நான் ஆலோசித்து வருகிறேன்.
இதற்காக முன்னாள் அரசு அதிகாரிகள் மற்றும் தலீபான்களுக்கு இடையே நடத்தப்படும் பேச்சுவார்த்தைக்கு எனது ஆதரவை அளிக்கிறேன். நான் மறுபடியும் ஆப்கானிஸ்தான் திரும்புவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்” என்று கூறியுள்ளார். குறிப்பாக 1996 ஆம் ஆண்டு தலீபான்கள் முதன்முதலாக காபூலை கைப்பற்றிய போது அப்போதிருந்த முன்னாள் அதிபரான முகமது நஜிபுல்லாவை ஐக்கிய நாடுகள் அலுவகத்தில் இருந்து இழுத்துச் சென்று, துன்புறுத்தி நடுத்தெருவில் அனைவரின் முன்பும் தலீபான்கள் அவரை தூக்கிலிட செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.