கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவியில் ஹிண்டல்கா என்ற சிறை உள்ளது. அந்த சிறையில் விசாரணை கைதிகள் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகள் என 500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சிறையில் 500 ரூபாய் கட்டணம் செலுத்தினால் ஒரு நாள் முழுவதும் கைதியாக வாழும் திட்டத்தை அதிகாரிகள் அமல்படுத்தி உள்ளன. கைதியின் வாழ்வில் ஒரு நாள்,என்ற கருத்தினை முன்வைத்து சாமானியர்கள் ஒரு கைதியின் வாழ்க்கையை 24மணி நேரத்திற்கு வாழ அனுமதிக்கும் விதமாக இந்த புதிய முயற்சியை கர்நாடக சிறைத் துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறார்கள். மேலும் சிறைக்கு வரும் பார்வையாளர்கள் மற்ற கைதிகளைப் போலவே நடத்தப்படுவார்கள் என்று சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் கைதிகளைப் போலவே சிறை சீருடை அணிவது, கைது எண்ணை பெறுவது, சிறையை பகிர்ந்து கொள்வது மற்றும் சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் அதே உணவை சாப்பிடுவது, சிறை கைதிகள் செய்யும் வேலைகளை செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ள வேண்டும்.
அவர்களுக்கென எந்த ஒரு தனி சலுகையும் அளிக்கப்படமாட்டாது. அன்றைய தினம் சிறை சுற்றுலா வந்த பார்வையாளர்கள் பணிகளை முடித்த பிறகு மற்ற கைதிகளுடன் தரையில் தூங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் கைதிகளின் வாழ்க்கை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கில் இந்த புதிய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைத் துறையினர் கூறுகின்றனர்.