நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களும், தமிழகத்தில் மட்டும் 4 ஆயிரம் இடங்களும் உள்ளன. அவை நீட் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது செப்டம்பர் 11 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதுநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், திருத்தம் மேற்கொள்ளவும் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி nbe.edu.in என்ற இணையதளத்தில் புதிய விண்ணப்பங்கள் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளலாம். எம்பிபிஎஸ் பயின்றவர்கள் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் தங்கள் பயிற்சி மருத்துவ காலத்தை நிறைவு செய்யும் பட்சத்தில் அவர்களும் முதுநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.