இராணுவ வீரர்கள் உண்ணும் கப் கேக்கில் கஞ்சாவை கலந்து கொடுத்த உணவக பொறுப்பாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படவுள்ளது.
கனடாவில் உள்ள New Brunswickச் சேர்ந்த Chelsea Cogswell என்ற பெண் அங்குள்ள இராணுவ உணவகம் ஒன்றில் பொறுப்பாளராக இருந்துள்ளார். அங்கு உணவு உண்ண வரும் துப்பாக்கி சூடும் பயிற்சியில் ஈடுபடும் இராணுவ வீரர்களுக்கு கேக்கில் கஞ்சா கலந்து கொடுத்துள்ளார். இதனால் இராணுவ வீரர்களுக்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம், போன்றவை ஏற்பட்டதுடன் மன ரீதியாகவும் பாதிப்படைந்துள்ளனர். மேலும் அவர்களால் தங்களது இலக்கை குறிவைத்து சூட முடியாமலும் இராணுவ ஆயுதங்களை பாதுகாக்க முடியாமலும் திணறி வந்துள்ளனர்.
இந்த நிலையில் அவர்களின் சிறுநீர் பரிசோதனை செய்யப்ப்பட்டது. அதில் கஞ்சா கலந்து இருப்பது தெரிய வந்தது. அதுவும் அவர்கள் உண்ட கப் கேக்கின் உறையில் கஞ்சா இருந்தது என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக Chelsea Cogswell மருத்துவ காரணங்களுக்காக கஞ்சா வாங்க அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் இந்த புகாரை மறுத்துள்ளார். இருப்பினும் கேக்கில் Chelsea Cogswell தான் கஞ்சாவை கலந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏனெனில் ராணுவ வீரர்களுக்கும் Chelsea Cogswellக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ராணுவ வீரர்கள் அவரை கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளனர். இதற்கு பழிவாங்கும் விதமாக Chelsea Cogswell கேக்கில் கஞ்சா கலந்துள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரின் மீது 10 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.