ஆப்கான் இளைஞர் தன்னுடைய இறப்பிற்கு பிரித்தானியா அரசு தான் பொறுப்பு என்று ஆங்கில ஊடகத்தில் பேட்டி அளித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் ஆப்கான் மக்கள் விமானம் மூலம் பல்வேறு நாடுகளுக்கு தப்பி வருகின்றனர். ஏனெனில் தலீபான்களின் சட்டம் மிக கடுமையாக இருக்கும் என்பதால் உயிர் பயத்தில் தப்பி செல்கின்றனர். இந்த நிலையில் ஆப்கான் தலைநகர் காபூலில் இருக்கும் இளைஞர் ஒருவர் பிரபல ஆங்கில ஊடகமான metro.co.uk என்னும் நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “நான் இப்பொழுது மிகுந்த அச்சத்தில் உள்ளேன். இதனால் நான்கு நாட்களாக உறங்கவோ,உண்ணவோ இல்லை. எனது குடும்பம் தலைமறைவாக உள்ளது. எங்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. எனது பக்கத்து வீட்டுக்காரர் தலீபான்களுடன் தொடர்பில் இருப்பவர்.
அவர் என்னிடம் நீ எட்டு ஆண்டுகளாக பிரித்தானியாவில் இருந்துள்ளாய். ஆதலால் நீ ஒரு உளவாளி. தலீபான்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உன்னை தேடி வரலாம். அவரின் முதல் இலக்காக நீ இருப்பாய் என்று கூறியுள்ளார். இதனால் அவ்வீட்டை விட்டு நாங்கள் இரவோடு இரவாக காலி செய்து வெளியேறி விட்டோம். எங்களுக்கு மாற்றக் கூட துணியின்றி இருக்கிறோம். இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படி தலைமறைவாக இருப்பது என்று தெரியவில்லை. எங்கும் செல்வதற்கு வழியில்லை. நான் விமான நிலையம் வழியாக தப்பிக்க சென்றபோது விசா இல்லாத காரணத்தினால் திருப்பி அனுப்பப்பட்டேன்.
நான் கடந்த 2011 ஆம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் படிப்பதற்காக லண்டனுக்கு சென்றேன். இதனை அடுத்து 2014 ஆம் ஆண்டு லண்டனில் வசிப்பதற்காக விண்ணப்பம் கோரினேன். ஆனால் கடந்த 2019ஆம் ஆண்டு என்னை பிரித்தானியா உள்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக தங்கியிருக்கிறேன் என்று ஆப்கானுக்கு நாடு கடத்தினர். ஆனால் என்மீது எந்த குற்ற வழக்கும் இல்லை. நான் நன்கு படித்தவன் மற்றும் ஐரோப்பிய சூழல் எனக்கு பழக்கமான ஒன்று. மேலும் நான் புகலிடம் கோரி விண்ணப்பம் அளித்த பொழுது பகுதி நேர வேலை புரிந்தேன். இருப்பினும் அவர்கள் என் பேச்சை மறுத்துவிட்டனர். நான் இப்பொழுது பிரித்தானியா அரசு மீது மிகவும் கோபத்தில் இருக்கிறேன்.
எங்களை தலீபான்கள் எப்போது வேண்டுமானாலும் தேடி வரப் போகிறார்கள் என்பது எனக்கு தெரியும். என்னை பிரித்தானியா அரசு வலுக்கட்டாயமாக ஆப்கான் திருப்பி அனுப்பினர். நான் ஒரு வேளை உயிரிழந்தால் அதற்கு காரணம் பிரித்தானியா அரசாங்கம் மட்டுமே” என்று வேதனையுடன் கூறியுள்ளார். இவர் தற்பொழுது நல்ல வேளையிலும் வரி செலுத்தும் அளவிற்கு ஒரு நாகரீக மனிதராக உள்ளார். குறிப்பாக கடந்த 2001 ஆம் ஆண்டின் புள்ளி விவரங்கள் வைத்து பார்க்கும் பொழுது பிரித்தானியாவில் 35,000த்திற்கும் மேலான ஆப்கானிஸ்தானியர்களின் வசிப்பிட விண்ணப்பம் பிரித்தானியா அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.