இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான சரக்கு போக்குவரத்தை திடீரென தலீபான் தீவிரவாதிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தலீபான் தீவிரவாதிகள் இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான சரக்கு போக்குவரத்தை திடீரென நிறுத்தி வைத்துள்ளனர். இதுகுறித்து இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு இயக்குனர் அஜய் சஹாய் கூறியதாவது “நீண்ட காலமாக எங்களுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பாகிஸ்தான் வழியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது தலீபான் தீவிரவாதிகள் பாகிஸ்தான் வழியே மேற்கொள்ளப்படும் சரக்கு போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர்.
இதன் மூலம் எங்கள் நாட்டிலிருந்து சென்ற இறக்குமதிகளையும் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் நாங்கள் ஆப்கானிஸ்தானில் நடைபெறுவதை தீவிரமாக நோட்டமிட்டு வருகிறோம். எங்கள் நாட்டிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீடு போன்றவற்றில் நீண்ட கால உறவை பேணி வருகிறோம். நாங்கள் ஆப்கானிஸ்தானுடன் இணைந்து 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் முதலீடு செய்துள்ளோம். மேலும் நாங்கள் ஆப்கானிஸ்தானுடன் இணைந்து சராசரியாக 400 வளர்ச்சித் திட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்” எனக் கூறியுள்ளார்.