அமெரிக்காவில் நபர் ஒருவர் காரில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறையினருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அமெரிக்காவில் பாராளுமன்ற கட்டிடம் அருகே பாதுகாப்பு நிறைந்த பகுதியில் கார் ஒன்று நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த காரில் வெடிகுண்டு இருப்பதாக காரை ஓட்டி வந்த டிரைவர் காவல்துறையினருக்கு செல்போனில் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து காரிலிருந்த அந்த நபரை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்ததோடு காரை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துள்ளனர். அதன் பிறகு சுமார் நான்கு மணி நேரத்திற்கு பின்பு பாதுகாப்பு படையினரிடம் காரில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டிய அந்த நபர் சரணடைந்துள்ளார்.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் காரில் எந்த விதமான வெடிகுண்டும் இல்லை என்பது தெரியவந்தது. அதன்பிறகு காரை ஓட்டி வந்த அந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் தெற்கு கரோலினா மாகாணத்தில் வசித்து வரும் ப்ளோய்டு ரே ரோஸ்பெரி (49) என்பது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.