தலீபான் தீவிரவாதிகள் பொது இடத்தில் வைத்து முன்னாள் அரசு அதிகாரி ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். இதற்கிடையில் அந்நாட்டின் அதிபரான அஷ்ரப் கனி நாட்டை விட்டு தனது குடும்பத்துடன் தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து இஸ்லாமிய விதிகள் படி பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படுவதாகவும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து எங்களுக்கு எதிராக போர் தொடுத்த மக்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாகவும் தலீபான் தீவிரவாதிகள் உறுதியளித்துள்ளனர். அதேவேளையில் தலீபான் தீவிரவாதிகள் நாடு முழுவதும் ஆப்கானிஸ்தான் கொடியை அகற்றிவிட்டு அவர்களின் வெள்ளைக் கொடியை எல்லா பகுதிகளிலும் ஏற்றியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் மூவர்ணக் கொடிக்கு ஆதரவாக போராடிய மக்களை நோக்கி தலீபான் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் Badghis மாகாணத்தில் முன்னாள் தலைமை போலீஸ் அதிகாரி Haji Mullah-வை பொது இடத்தில் வைத்து தலீபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் துடிதுடிக்க சுட்டு கொலை செய்துள்ள காட்சிகள் இணையத்தில் வெளியாயுள்ளது. அந்த காட்சியில் போலீஸ் அதிகாரி கண் மற்றும் கை கட்டப்பட்ட நிலையில் மண்டியிட வைத்து துடிதுடிக்க சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஏற்கனவே சில நாட்களுக்கு முன் Haji Mullah தலீபான் தீவிரவாதிகளிடம் சரணடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த Haji Mullahவின் படுகொலையானது ஆப்கானிஸ்தானில் உள்ள ஒவ்வொரு முன்னாள் அரசு அதிகாரிகளுக்கும் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.