காவல் நிலையம் அருகே தி.மு.க பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணா நகர் காவல் நிலையம் அருகில் இரவு நேரத்தில் ஒருவர் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஆட்டோவில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அந்த நபரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று கொலை செய்யப்பட்டவரின் சடலத்தை பார்வையிட்டுள்ளனர். ஆனால் அவரது தலை முழுவதும் வெட்டப்பட்டு முகம் சிதைந்த நிலையில் இருந்ததால் அந்த நபர் யார் என்பதை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அந்த நபர் ஓட்டி சென்ற மொபட்டின் முன்பகுதியில் புகைப்படத்துடன் கூடிய தி.மு.க ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.
இதனை அடுத்து காவல்துறையினர் அவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் டி.பி, சத்திரம் பகுதியில் வசித்த தி.மு.க பிரமுகரான சம்பத்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர் பல்வேறு தி.மு.க பொதுக்கூட்டங்களில் பேச்சாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனையடுத்து சம்பத் குமார் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்