இந்தியாவில், தங்க நகைகளுக்கு ‘ஹால்மார்க்’ தரக்குறியீடு, ஜூலை 1 முதல் கட்டாயமாகி உள்ளது. ஆனால், போதிய தர நிர்ணய மையங்கள் இல்லாததால், நகைக் கடைக்காரர்களால், நகைகளை உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முடியவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. முன்பெல்லாம் 24 மணி நேரத்தில் முத்திரை கிடைத்து விடும். தற்போது, நான்கு நாட்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஒரே நாளில் முத்திரை கிடைத்து விட்டால், அந்த நகை மாடல்கள், உடனடியாக எங்கள் ‘ஷோரூம்’களுக்கு வந்து, விற்பனை கூட ஆகலாம். இந்த புதிய நடைமுறையால் தங்க நகை விற்பனை பாதிக்கப்படுகிறது என விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில் தர நிர்ணய மையங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இரண்டு ஆண்டுகளில், அதன் எண்ணிக்கை, இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. தற்போது, சென்னையில் 28 மையங்களும், தமிழகம் முழுதும் 103 மையங்களும் உள்ளன.ஏராளமான நிறுவனங்கள், புதிய மையங்களை துவங்க விண்ணப்பித்து வருகின்றன. அதேபோல், தங்க ஆபரணத்துக்கு ஹால்மார்க் தர முத்திரை பெற, நான்கு நாட்கள் ஆகிறது என்பது பழைய நிலை. தற்போது, விரைந்து வழங்கப்படுகிறது என்று இந்திய தர நிர்ணய ஆணையம் தரப்பில் கூறப்பட்டது.