லோடு ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் 4 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் இசக்கியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்பையில் பழக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் இசக்கியப்பன் பழக்கடைக்கு வாழைப்பழங்கள் வாங்குவதற்காக ஏர்வாடி அருகிலுள்ள சிறுமளஞ்சிக்கு லோடு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அவருடன் அதே பகுதியில் வசிக்கும் ஆறுமுகம், ராஜா, ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். இந்த லோடு ஆட்டோவை அம்பாசமுத்திரம் பகுதியில் வசிக்கும் லட்சுமணன் என்பவர் ஓட்டினார்.
இந்நிலையில் களக்காடு – சேரன்மகாதேவி சாலையிலுள்ள நெடுவிளை இசக்கியம்மன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த காருக்கு வழி விடுவதற்காக லோடு ஆட்டோவை லட்சுமணன் வலதுபுறமாக திருப்பினார். அப்போது லோடு ஆட்டோ நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராஜா, லட்சுமணன், ஆறுமுகம், இசக்கியப்பன் ஆகிய 4 பேரையும் அருகிலுள்ளவர்கள் உடனடியாக மீட்டு திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.