பீரோவில் இருந்த 20 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காட்டில் பார்வதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாரதி என்ற மகள் உள்ளார். கடந்த மாதம் 28 – ஆம் தேதி பாரதிக்கு சீமந்த விழா நடைபெற்றது. அதற்காக பார்வதி வீட்டை பூட்டிவிட்டு ஓச்சேரி பகுதிக்கு சென்றுள்ளார். அதன்பின் பார்வதி உறவினர்களுடன் ஆற்காட்டில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனது மகளின் பிரசவ சிகிச்சைக்காக பணம் தேவைப்பட்டுள்ளது.
அதற்காக பார்வதி வீட்டில் இருந்த நகைகளை அடகு வைக்க பீரோவை திறந்து பார்த்துள்ளார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 சவரன் தங்க நகைகள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து பார்வதி ஆற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.