முன்விரோதம் காரணமாக மோதிக்கொண்ட 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பழுவூர் கிராமத்தில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜய்குமார் என்ற மகன் உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டபோது ஒருவரை ஒருவர் கத்தி மற்றும் அரிவாளால் தாக்கி உள்ளனர்.
இதனால் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அஜய் குமார் மற்றும் முருகன் ஆகிய 2 பேரும் தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் படி காவல்துறையினர் விக்ரம், ராஜபாண்டி, புகழ்மணி உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.