இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீருக்கு இன்று (14.10) பிறந்த நாள். எனவே இன்று அவரை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
இந்திய வரைபடத்தை மாற்றும் முயற்சிகளில் நீங்கள் ஈடுபடுகிறீர்களா ? காஷ்மீரை நீங்க பாகிஸ்தானுக்கு மாற்ற இந்தியாவில் இருந்து நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்களா ? நீங்களோ அல்லது உங்கள் சக அரசியல்வாதிகளோ காஷ்மீர் இளைஞர்களுக்காக என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? என்பதை சொல்ல முடியுமா ? இந்த வார்த்தைகள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் உடையது. காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை நோக்கிதான் இந்த கேள்விகளை அவர் எழுப்பி இருந்தார்.
கௌதம் கம்பீர் என்ற பெயரைக் கேட்டதும் 2007-ம் ஆண்டு 20 20 உலகக் கோப்பையை போட்டியிலும் , 2011ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பை போட்டி இறுதிப் போட்டியிலும் அவரது செயல்பாடுகள் தான் பெரும்பாலோனோருக்கு நினைவில் வரும். தோனியின் குறிப்பிடதக்க சாதனைகளாக கருதப்படும் இந்த இரண்டு உலக கோப்பை போட்டிகளிலும் கவுதம் கம்பீரின் பங்களிப்பு முக்கியமானது.
1981ஆம் ஆண்டு அக்டோபர் 14 அன்று டெல்லியில் பிறந்த கவுதம் கம்பீர் 2000 ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டியில் இடம் பெறும் வாய்ப்பை இழந்தவர். பின்னர் 2003 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு ஒரு நாள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வாய்ப்பு பெற்ற கம்பீர் ஆரம்பத்தில் சரியாக விளையாடாத போதும் , சில ஆண்டுகளில் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவரானார். இந்திய அணியின் வெற்றிக்கு பல தருணங்களில் காரணமாக இருந்திருக்கிறார்.
கம்பீர் கிரிக்கெட் அணியில் விளையாடிக் கொண்டிருக்கும் போது இவர் தெரிவிக்கும் அரசியல் கருத்துக்கள் பிரசித்தி பெற்றவை. இந்திய ராணுவ வீரர் ஒருவர் குறித்து அவர் கூறும் கருத்துக்கள் வரவேற்பையும் , விமர்சனகளையும் ஒருசேர பெற்றன. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை குறித்து திரைப்படம் வெளியான போது தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பின. ஒரு கிரிக்கெட் வீரருக்கு வாழ்க்கை வரலாறு படம் எடுப்பதை விட ராணுவ வீரர் குறித்து படம் எடுக்கலாம் என்றார். தோனிக்கும் அவருக்குமான மோதல் காரணமாகவே அவர் இப்படி கூறியிருப்பதாக விமர்சிக்கப்பட்டது.
அதேபோலத்தான் இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் கொல்லப்படும் போது பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் போட்டிகள் நடத்த கூடாது என தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அதன் நீட்சிதான் காஷ்மீர் பிரச்சனையில் உமர் அப்துல்லாவுக்கு நடந்த ட்விட்டர் விவாதம் ஒரு விளையாட்டு வீரர் அரசியல் புரிதலோடும் தேசத்தையும் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக கவுதம் கம்பீர் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.