தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அது குறித்த அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இதுபற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதம்வரை 5 சவரன் நகை மற்றும் அதற்கு மேல் வைத்துள்ள நகை கடன் விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகுதியான பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி கிடைக்க ரேஷன்கார்டு, ஆதார் எண் மற்றும் பான் கார்டு ஆகியவை சேகரிக்கப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் இந்த பணிகள் முடிவடைந்து விடும் என கூறியுள்ளனர். அதன் பிறகு தமிழக அரசு ஆலோசித்து நகை கடன் தள்ளுபடி பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.