இராணுவம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்களை தலீபான்கள் தேடி கொன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை கடந்த ஞாயிறுகிழமை அன்று தலீபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கையில் சென்றது. இதனை அடுத்து ஆட்சியைப் கைப்பற்றிய சில நாட்களிலேயே தலீபான்கள் அவர்களின் உண்மையான சுயரூபத்தை காட்ட ஆரம்பித்துவிட்டனர். இந்த நிலையில் நேற்று ஆப்கானிஸ்தானின் 102 வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதற்காக ஏராளமான மக்கள் ஆப்கானிஸ்தான் தேசிய கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். அந்த ஊர்வலத்தில் சென்ற பொதுமக்களை தலீபான்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். மேலும் புர்கா அணியாமல் சென்ற பெண்களை கொலை செய்து உள்ளனர். இது தொடர்பான காணொளி மற்றும் புகைப்படங்கள் வெளியாகி அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தலீபான்கள் வீடு வீடாக சென்று அவர்களின் எதிரிகளை கொன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிலும் அஷ்ரப் கனி ஆட்சியில் இருந்தபோது அவருடன் இருந்த முக்கிய அதிகாரிகள் மொழிபெயர்ப்பாளர்கள், மேற்கத்திய நாடுகளில் இருந்து வேலைக்கு பணியமர்த்தப்பட்டவர்கள் போன்றோரை தலீபான்கள் கொன்று வருவதாக தெரியவந்துள்ளது. முக்கியமாக ஆப்கானிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றிய வீரர்கள் மற்றும் காவல்துறையினர் மிகவும் ஆபத்தில் இருப்பதாக உலகளாவிய பகுப்பாய்வுகளுக்கான நோர்வே மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்த மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “முன்னாள் ஆட்சியில் தொடர்பு கொண்டவர்களை தலீபான்கள் தேடி கொன்று வருகின்றனர். ஒருவேளை அவர்கள் கிடைக்கவில்லை எனில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை கைது செய்து ஷரியத் சட்டத்தின் கீழ் தண்டனை அளிக்கின்றனர். குறிப்பாக ராணுவம், காவல்துறை மற்றும் புலனாய்வு பிரிவுகளில் வேலை செய்தவர்களை குறிவைத்து தாக்குகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.