தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் ஏராளமான பெண்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேட்டாம்பாடி ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 200க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த திட்டத்தின் கீழ் வேலை பார்ப்பவர்களுக்கு மாதத்தில் 6 நாள்கள் மட்டுமே பணி வழங்கப்படுவதாகவும், அதற்கான ஊதியம் வழங்குவதிலும் முறைகேடு நடப்பதாகவும் வேலை பார்க்கும் பெண்கள் நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனையடுத்து வேட்டாம்பாடி வார்டு கவுன்சிலர் ரமேஷ் தலைமையில் ஊரக வேலை வாய்ப்பின் கீழ் பணிபுரியும் எராளமான பெண்கள் இணைந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, நாமக்கல் சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின்னரே போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.