ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சேர்ந்தனூர் பகுதியில் பச்சையப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பச்சையப்பனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஆஷா என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு நித்திய ஸ்ரீ என்ற மகள் இருக்கிறாள்.
இந்நிலையில் பச்சையப்பன் கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் பச்சையப்பன் தனது மனைவி மற்றும் மகளுடன் பேசாமல் இருந்ததால் சந்தேகமடைந்த ஆஷா எதற்காக வேலைக்கு செல்லவில்லை என்று அவரிடம் கேட்டுள்ளார். அப்போது தான் ஆன்லைனில் ரம்மி விளையாடியதாகவும், அதில் பணத்தை இழந்து விட்டதாகவும் பச்சையப்பன் தனது மனைவியிடம் கூறி கதறி அழுதுள்ளார். மேலும் தனது செல்போனையும் பச்சையப்பன் தூக்கி எறிந்ததால் அது சுக்குநூறாக உடைந்து விட்டது.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பச்சையப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பச்சையப்பனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.