கல்லால் அடித்து விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் பேச்சி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துரைபாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் துரைபாண்டிக்கும் அதே பகுதியில் வசிக்கும் அவரது உறவினரான சிவசங்கர பெருமாள் என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற கோவில் கொடை விழாவில் இரு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் துரைப்பாண்டி அப்பகுதியிலுள்ள அவரது வயலின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கும் அங்கு வந்த சிவசங்கரபெருமாள் மற்றும் அவரது மகனான சட்டநாதன் உள்ளிட்ட சிலருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த சிவசங்கர பெருமாள் அவரது மகன் சட்டநாதன் மற்றும் சிலர் சேர்ந்து துரைப்பாண்டியை அருகில் இருந்த கல்லால் அடித்து உள்ளனர்.
இதனால் பலத்த காயமடைந்த துரைப்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கல்லிடைகுறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துரைப்பாண்டியின் சடலத்தை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக சங்கர பெருமாள், சட்டநாதன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.