தலீபான் தீவிரவாதிகள் வெள்ளை நிற உடையை அணிந்து கைகளில் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு சாலையில் அடையாள அணிவகுப்பு நடத்தியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தான் நாடு முழுவதும் தலீபான் தீவிரவாதிகளின் வசம் சென்றுள்ளது. இதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தலீபான் தீவிரவாதிகள் எங்களைக் கண்டு யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அனைவரும் வேலைக்கு செல்லலாம் என்று உறுதியளித்த சில நாட்களிலேயே அவர்களது உண்மையான முகத்தை காட்ட ஆரம்பித்துவிட்டனர்.
அதாவது பொது இடத்தில் பர்தா அணியாத இளம்பெண் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராக போராட்டம் செய்தவர்கள் என அனைவரையும் குறிவைத்து தலீபான்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொலை செய்து வருகின்றனர். மேலும் ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் ஆட்சி இல்லை சரியத் சட்டம் தான் பின்பற்றப்படும் என்று தலீபான் தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர். இதனால் எந்த நேரத்திலும் என்ன நடக்குமோ என்று மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்நிலையில் தலீபான் தீவிரவாதிகள் ஜாபுல் மாகாணத்தில் உள்ள குவாலத் நகரத்தில் வெண்ணிற உடை அணிந்து கைகளில் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு சாலைகளில் ஊர்வலம் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தலீபான்கள் பயன்படுத்திய ஃபேஸ்புக், வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இணையதளப் பக்கமும் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.