அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மஞ்சாடி பகுதியில் ஆட்டோ டிரைவரான சசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாஜின் என்ற மகனும், ஒரு மகளும் இருந்துள்ளனர். இந்த பெண்ணுக்கு தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஷாஜினும், அவரது உறவினரான பெர்லின் குமார் என்ற சிறுவனும் மோட்டார் சைக்கிளில் மஞ்சாடி நோக்கி சென்றுள்ளனர். இவர்கள் ஒற்றாமரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஷாஜின் முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது சாலையை கடக்க முயன்ற நசீர் என்பவர் மீது ஷாஜினின் மோட்டார்சைக்கிள் பலமாக மோதி விட்டது.
இதனால் தூக்கி வீசப்பட்ட பெர்லின் குமார் மற்றும் ஷாஜின் ஆகிய இரண்டு பேரும் அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் நசீர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இரண்டு சிறுவர்களின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.