வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு அனைத்து அம்பாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அம்பாள் கோவில்களில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சீரும் சிறப்புமாக வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. அதன்பின் அம்மன் ஆதி காமாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்துள்ளார். இதனையடுத்து ஆதி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. இந்தப் பூஜையில் விரதம் இருந்த அனைத்து பெண்களும் பங்குபெற்று அம்மனை தரிசனம் செய்துள்ளனர். இதே போல் பாரதிபுரம் பகுதியில் இருக்கும் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், வழிபாடு மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
அதில் அம்மன் ஜமதக்னீஸ்வருடன் பக்தர்களுக்கு காட்சி அளித்துள்ளனர். பின்னர் குமாரசாமிபேட்டை பகுதி மாரியம்மன் கோவில், அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், அன்னசாகரம் மாரியம்மன் கோவில், பாளையம் சக்தி மாரியம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், ஓம் சக்தி மாரியம்மன் கோவில் என பல கோவில்களில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. அதன் பின் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சின்னத்தாயம்மாள் நகரில் இருக்கும் பெரும்பாலான வீடுகளில் பெண்கள் விரதம் இருந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டுள்ளனர்.
இந்த வழிபாட்டில் அப்பகுதிகளில் வசிக்கும் பெண்கள் பூஜையில் கலந்து கொண்டு அவர்களுக்கு பிரசாதமாக இனிப்புகள், வளையல், மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பழைய பேட்டையில் இருக்கும் சக்தி மாரியம்மன் கோவிலில் வரலட்சுமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. அப்போது அந்த பூஜையில் பெண்கள் பலரும் பங்குபெற்று அம்மனுக்கு மஞ்சள், தாலி, கயிறு, குங்குமம், பழங்கள், வளையல் ஆகிய அனைத்தும் வைத்து சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டுள்ளனர். மேலும் இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு அன்னதானம் போடப்பட்டு பிரசாதமாக மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு வழங்கப்பட்டுள்ளது.