தொழிலதிபர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருணாசலபுரம் பகுதியில் சந்தனகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு பூலோக லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற சந்தனகுமார் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் சந்தன குமாரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
இந்நிலையில் ஈன்ஜார் கண்மாய் பகுதியில் கழுத்து இறுக்கப்பட்ட காயத்துடன் சந்தனகுமார் சடலமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சந்தன குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தனகுமார் செல்போனில் கடைசியாக பேசிய நபர்களின் விவரங்களை சேகரித்துள்ளனர்.
இதனை அடுத்து குமார் என்பவர் காவல்துறையினரிடம் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் சந்தனகுமார் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் குமார் அளித்த தகவலின்படி காவல்துறையினர் சதீஷ்குமார், பழனி குமார், சுரேஷ் குமார், செந்தில் குமார், அசோக் ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும் பிடிப்பட்ட 6 பேரிடமும் காவல்துறையினர் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.