காதல் திருமணம் செய்து கொள்வதற்காக சென்ற இளம்பெண் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தியாகி அண்ணாமலை நகரில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதேஸ்வரன் என்ற மகன் உள்ளார். இவர் சென்னையில் கூலி வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் மாதேஸ்வரனும், சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ணகி நகரில் வசித்த சரிதா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொள்வதாக கூறி மாதேஸ்வரன் சரிதாவை திருவண்ணாமலைக்கு அழைத்து சென்றுள்ளார்.
இதனை அடுத்து திருவண்ணாமலை முத்து விநாயகர் கோவில் தெருவில் இருக்கும் ஒரு உறவினர் வீட்டில் மாதேஸ்வரன் சரிதாவை தங்க வைத்துள்ளார். இதற்கிடையில் சென்னை கண்ணகி நகர் காவல் நிலையத்தில் தங்களது மகளை காணவில்லை என சரிதாவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரிதாவை தீவிரமாக தேடியுள்ளனர்.
இந்நிலையில் உறவினர் வீட்டின் மொட்டை மாடியில் செல்போன் பேசி கொண்டிருந்த சரிதா திடீரென கால் தவறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரிதாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாதேஸ்வரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.