ரிக் வண்டியில் இருந்த இரும்பு குழாய் எதிர்பாராத விதமாக தச்சு தொழிலாளி மீது விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகில் உள்ள புதுபள்ளிபாளையம் ஆறுமுகம் லைனின் சக்கரபாணி என்பவர் வசித்து வந்துள்ளார். தச்சு தொழிலாளியான இவருக்கு சாணார்பாளையம் வேளாங்காட்டார் நகரில் சொந்தமாக இடம் உள்ளது. இந்நிலையில் அந்த இடத்தில் தற்போது வீடு கட்டும் பணிகள் தொடங்கி ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. அப்போது ரிக் வண்டி திடீரென பழுதாகியுள்ளது. இதனையடுத்து அங்கிருந்த தொழிலாளர்கள் வண்டியை பழுது பார்த்து கொண்டிருந்துள்ளனர்.
இந்நிலையில் ரிக் வண்டியில் இருந்த இரும்பு குழாய் எதிர்பாராத விதமாக அங்கு நின்றுகொண்டிருந்த சக்கரபாணி மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே சக்கரபாணி துரதிஷ்ட வசமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற குமாரபாளையம் காவல்துறையினர் சக்கரபாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வேலை பார்க்கும் போது கவனக்குறைவாக இருந்த ரிக் வண்டி ஆபரேட்டர் ஆறுமுகம் என்பவரை கைது செய்துள்ளனர்.