ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அங்கிருந்து உள்நாட்டினரும், வெளிநாட்டினரும் தப்பித்துச் செல்ல முயன்று வருகிறார்கள். அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை, ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் ருத்ரேந்திர டாண்டன் உள்பட 120 இந்தியர்கள் விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். இன்னும் ஏராளமான இந்தியர்கள் ஆப்கானிஸ்தானில் சிக்கித்தவித்து வருகிறார்கள். வணிகரீதியான விமான போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்களை அழைத்துவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களுக்கு உதவ சிறப்பு பிரிவு ஒன்றை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து 107 இந்தியர்கள் உள்பட மேலும் 168 பேரை இந்தியா மீட்டுள்ளது . 168 இந்தியர்களுடன் புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம் உ.பி.யின் காசியாபாத்தில் தரையிறங்கியது. காசியாபாத் விமானப்படை தளத்தில் இருந்து பின்னர் 168 பேரும் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.