ஆஸ்திரேலியாவில், கொரோனாவை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கை எதிர்த்து நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
ஆஸ்திரேலிய நாட்டில், பல நகர்களில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருக்கிறது. எனவே, அங்கு ஊரடங்கில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும், நாட்டின் மிகப் பெரிய நகரான சிட்னி, மெல்போர்ன், தலைநகர் கான்பெர்ரா ஆகிய நகர்களில் கொரோனா தொற்று, சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.
எனவே, இந்த நகர்களில் ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. அத்தியாவசிய தேவைகள் தவிர பிற காரணங்களுக்காக பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கை எதிர்த்து நாடு முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.
பல நகர்களில், நூற்றுக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒரு சில இடங்களில் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் காவல்துறையினர் 7 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் மொத்தமாக 250 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் பல நபர்கள், கொரோனா விதிமுறைகளை மீறியதால், அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.